search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமிரபரணி ஆறு"

    நெல்லை, பாபநாசத்தில் தாமிரபரணி ஆற்றுக்கு தீப ஆரத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோசாலை ஜடாயூத்துறையில் வைகாசி விசாகமான நேற்று தாமிரபரணி ஆறு பிறந்த நாளையொட்டி மாலை 6 மணிக்கு தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும், சுமங்கலி பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து ஆற்றுக்கு ஒரு கரையில் இருந்து மறுகரை வரைக்கும் 15 பட்டு புடவைகளை ஒன்றாக இணைந்து ஆற்றில் சாத்தி சிறப்பு பூஜையும், மகா ஆரத்தியும் நடத்தினார்கள். ஜடாயூத்துறையில் நேற்று அமலைசெடிகள் தேங்கி கிடந்தது. இதை அந்த ஆரத்தி பூஜைக்கு வந்தவர்கள் அகற்றினார்கள்.

    இந்த சிறப்பு பூஜையில் ராமானந்தாசுவாமிகள், ஆத்மானந்தா சுவாமிகள், வரதராஜூ சுவாமிகள், அன்னை ராமலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பாபநாசத்தில் சித்தர்கள் கோட்ட ஆரத்திக்குழு, 27 சமுதாய பொதுமக்கள் சார்பில், தாமிரபரணி பவுர்ணமி தீப ஆரத்தி விழா, வைகாசி விசாக நதி உற்பவ நாள் விழா நடந்தது. விழாவில் தத்துவ நிஷ்டானந்த சரஸ்வதி சுவாமி தாமிரபரணி நதிக்கு தீப ஆரத்தியை தொடங்கி வைத்தார். பொன் பெருமாள் தாமிரபரணி மகா புஷ்கர நினைவு கல்வெட்டை திறந்து வைத்தார்.

    தாமிரபரணி கலச பூஜை, தீப ஆரத்தி விழா நினைவு மலர் வெளியீடு, சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும் மகளிருக்கு மஞ்சள் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நாகராஜன் உள்ளிட்ட பக்தர்கள் பாபநாசசுவாமி கோவிலில் இருந்து தாமிரபரணி நதிக்கு சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்தனர்.
    ஏரல் அருகே தாமிரபரணி ஆற்றங்கரையில் பிணமாக கிடந்தவர்கள் திருப்பூர் தம்பதி என்றும், குடும்ப பிரச்சினையில் அவர்கள் தற்கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உமரிக்காடு மெயின் ரோட்டில் அரசு சிமெண்ட் குடோன் உள்ளது. இதன் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சீமை கருவேல மரங்கள் நிறைந்த காட்டு பகுதி உள்ளது.

    இங்கு தாமிரபரணி ஆற்றங்கரையில் நேற்று காலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் 2 பேரும் அரை நிர்வாணமாக இறந்து கிடந்தனர். அவர்கள் இறந்து ஒரு வாரத்துக்கு மேலானதால் உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர்களின் உடல்களை காட்டு விலங்குகள் தின்றதால் உருக்குலைந்த நிலையில் இருந்தன.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஏரல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சகாய ஜோஸ், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்த ஆண் வேட்டி, சட்டை அணிந்து இருந்தார். இறந்த பெண் சேலை, சட்டை அணிந்து இருந்தார்.

    அவர்களது செருப்புகள், தண்ணீர் பாட்டில் அருகில் தனியாக கிடந்தன. எனவே அவர்கள் கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என்று போலீசார் கருதி விசாரணை நடத்தினர். இறந்த ஆண், பெண் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த ஆண், பெண் யார்?, அவர்கள் எப்படி இறந்தனர்?, தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(65), அவரது மனைவி பாலாமணி(58) என்பது தெரியவந்தது.

    சிவசுப்பிரமணியன் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. பல இடங்களில் வரன் பார்த்தும் திருமணம் தள்ளிப்போனதாக தெரிகிறது. இதனால் அவர்கள் மனவேதனையில் இருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினையும் இருந்து வந்தது.

    இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் இருவரும் ஏரல் பகுதிக்கு வந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயு துறையில் தாமிரபரணி ஆற்றில் ஜடாயு படித்துறையில் மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பூக்களை தூவி வழிபாடு நடத்தப்பட்டது.
    ஆங்கில புத்தாண்டையொட்டி நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் ஜடாயு துறையில் நேற்று மாலை 6.15 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் ஜடாயு படித்துறையில் மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டு, பூக்களை தூவி வழிபாடு நடத்தப்பட்டது.

    தாமிரபரணி நதியை பாதுகாக்கவும், மழை பொய்க்காமல் சீராக பெய்யவும், உலக நன்மை மற்றும் பக்தர்கள் குடும்ப நலன் வேண்டியும் இந்த ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது. 
    புஷ்கர விழாவையொட்டி நேற்று மாலை தாமிரபரணி ஆற்றில் ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு பிரிட்டன் மாநில கவர்னர் முத்துவேல் சசீந்திரன் புனித நீராடினார். #ThamirabaraniPushkaram
    செய்துங்கநல்லூர்:

    தாமிரபரணி ஆற்றில் கடந்த 11-ந்தேதி முதல் மகா புஷ்கர விழா நடந்து வருகிறது. இதில் ஏராளமான வெளிமாவட்டம், மாநிலம், வெளி நாட்டை சேர்ந்தவர்கள் வந்து நீராடி வருகிறார். நேற்று மாலை ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு பிரிட்டன் மாநில கவர்னர் முத்துவேல் சசீந்தீரன் குடும்பத்துடன் நீராடினார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை தாயகமாக கொண்டவர் முத்துவேல் சசீந்திரன். இவர் தற்போது ஆஸ்திரேலியா நாட்டின் மேற்கு பிரிட்டன் மாநில கவர்னராக பணியாற்றி வருகிறார். புஷ்கர திருவிழாவையொட்டி தாமிரபரணியில் நீராட நேற்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். பின்னர் அவர் அகரம் தாமிரபரணி ஆற்றில் நீராடினார். தொடர்ந்து அகரம் அஞ்சேல் பெருமாள் கோயில், அருகில் உள்ள சிவன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பின் அவர்கள் முறப்பநாடு வந்து கைலாசநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்தனர். பின் அவர்கள் அங்கிருந்து மாலை தூத்துக்குடி விமானத்தில் பிரிட்டன் கிளம்பினர்.

    மேலும் முறப்பநாடு, ஆழிகுடி, கருங்குளம், அகரம் ஆகிய பகுதியில் சிறப்பு ஆராதனை நடந்தது. 4 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை நாட்களால் முறப்பநாடு குரு தீர்த்தக் கட்டத்தில் அதிகமான பக்தர்கள் நீராடினார்கள்.

    காலையில் சிறப்பு யாகம் நடந்தது. மாலையில் நதி ஆராத்தி நடந்தது. முறப்பநாடு அருகே ஆழிகுடியிலும் சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து விளக்கு பூஜை நடந்தது.

    இதில் 108 பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் தாமிரபரணிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. அகரம் தசவதார தீர்த்தகட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்கு அன்னை தாமிரபரணி நதிக்கு அனைத்து அபிசேகமும் செய்து 6.45 மணிக்கு மங்கள ஆரத்தி தீபாராதனை செய்தனர்.

    கருங்குளத்தில் நடந்த மகாபுஷ்கர தினவிழாவை முன்னிட்டு காலை யாகசாலை பூஜை நடந்தது. மாலை நதிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.  #ThamirabaraniPushkaram


    தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில், தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கும் படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #HighCourt
    சென்னை:

    ஐகோர்ட்டில், புலவர் மகாதேவன் என்பவர் தொடர்ந்துள்ள மனுவில், ‘நெல்லை மாவட்டத்தில், தாமிரபரணி ஆற்றில் வருகிற 12-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை புஷ்கரம் விழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதற்காக நெல்லையில் தைப்பூசப் படித்துறை மற்றும் குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் புனித நீராட தடை விதித்து மாவட்ட கலெக்டரும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.

    நெல்லையப்பர், காந்திமதி அம்மன் தீர்த்தவாரி உற்சவங்கள் நடைபெறும் தைப்பூசப் படித்துறையில் புனித நீராட தடை விதித்து இருப்பது சட்டவிரோதமானது.

    அதேபோல, குறுக்குத் துறை படித்துறையில் நீராடுவதற்கு தடை விதித்து இருப்பதையும் ஏற்க முடியாது. எனவே இந்த 2 படித்துறைகளிலும் புஷ்கர விழாவின்போது பக்தர்கள் நீராட அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும்போது, அதில் சுழல் ஏற்படும். குளிப்பவர்கள் அதில் சிக்கினால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

    எனவே, அங்கு பெய்யும் மழையின் அளவு, தாமிரபரணியில் ஓடும் தண்ணீரின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில், தைப்பூசப் படித்துறை, குறுக்குத்துறை படித்துறை ஆகிய இடங்களில் பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். #HighCourt
    மகாபுஷ்கர விழா தொடங்குவதற்கு முன்பு தாமிரபரணியில் உள்ள மண்டபங்கள், படித்துறைகளை புதுப்பிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. #MaduraiHCBranch
    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தாமிரபரணி மகா புஷ்கர திருவிழா அக்டோபர் 12 முதல் 21 வரை நடைபெறுகிறது. புஷ்கர விழாவுக்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கியுள்ளது. குறுக்குத்துறை கோவில் அருகே தாமிரபரணி தாய் கோவில் கட்டும் பணியும் நடைபெறுகிறது.

    தாமிரபரணியில் 144 தீர்த்த கட்டிடங்கள் உள்ளன. இவைகள் ஒவ்வொன்றும் புராண வரலாறு கொண்டவை. இந்த படித்துறைகளும், மண்டபங்களும் இடிந்தும், புதர் மண்டியும் இருக்கின்றன. சாக்கடை நீர் நேரடியாக ஆற்றில் விடப்படுகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 15 இடங்களில் மகாபுஷ்கர திருவிழா கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தாமிரபரணியை சுத்தம் செய்யவும், மண்டபங்கள், படித்துறைகளை பராமரிக்கவும், சாக்கடை நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே புஷ்கர விழா தொடங்குவதற்கு முன்பு தாமிரபரணியில் உள்ள அனைத்து மண்டபங்கள், படித்துறைகளை புதுப்பிக்கவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் புஷ்கர விழாவை கொண்டாடவும் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை செப்டம் பர் 10-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். #MaduraiHCBranch
    தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் ஏற்கனவே சேதம் அடைந்த பகுதி மீண்டும் வெள்ளத்தில அரித்து செல்லப்பட்டது. #Thamirabaraniriver
    ஏரல்:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பின. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவை குண்டம் தடுப்பணையை தாண்டி விழுந்து ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரானது ஏரல், ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது.

    ஏரலில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பழமைவாய்ந்த தரைமட்ட தாம்போதி பாலம் உள்ளது. கடந்த 2015, 2016ம் ஆண்டுகளில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தின் நடுவில் அரித்து செல்லப்பட்டது. வெள்ளம் வடிந்த பின்னர், பாலம் அரித்து செல்லப்பட்ட இடத்தில் ஜல்லி கற்கள் மற்றும் சரள் மண்ணை நிரப்பி சீரமைத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அதன் அருகில் உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாகவே அனைத்து வாகனங்களும் செல்கின்றன. ஆற்றில் தண்ணீரின் அளவு சற்று குறைவாக சென்றது. அப்போது தரைமட்ட பாலத்தில் ஏற்கனவே சேதம் அடைந்த பகுதி மீண்டும் வெள்ளத்தில் அரித்து செல்லப்பட்டது தெரிய வந்தது. எனவே ஏரல் தரைமட்ட தாம்போதி பாலத்தில் வெள்ளம் அரித்து சென்ற பகுதியை காங்கிரீட் கலவையால் முறையாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.  #Thamirabaraniriver

    மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நம்பியாறு அணை நிரம்பியது. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாகவும் வெள்ளம் செல்கிறது. #Thamirabaraniriver
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள 11 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அதிகபட்சமாக அடவி நயினார் அணை பகுதியில் 45 மில்லி மீட்டர் மழையும், குண்டாறு பகுதியில் 28 மில்லி மீட்டர் மழையும், நகர் புறமான செங்கோட்டையில் 19 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

    பாபநாசம் அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பெய்தது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 665 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 141.65 அடியாக உள்ளது. அணை நிரம்பியதால் அணையின் பாதுகாப்பை கருதி கால்வாய்கள் மூலம் வினாடிக்கு ஆயிரத்து 20 கன அடியும், கீழ் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 460 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 147.64 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 156 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 55 கனஅடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. மேலும் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகிய அணைகள் முழு கொள்ளவையும் அடைந்து நிரம்பி வழிகிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள நம்பியாறு அணைக்கும், வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் குறைந்த அளவே வந்ததால் அந்த அணைகள் நிரம்பாமல் இருந்தது. நேற்று முன்தினம் பெய்த கனமழையில் நம்பியாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் நம்பியாறு அணைக்கு தண்ணீர் வேகமாக வரத்தொடங்கியது. இன்று அணையின் நீர்மட்டம் 20.6 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த கொள்ளளவு 22 அடியாகும். சிறிய அணை என்பதால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணைக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 14 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 15 அடியாக உயர்ந்துள்ளது.

    இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு அணைகளை தவிர மற்ற 9 அணைகளும் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

    தொடர் மழை காரணமாக அணைகளில் இருந்து தண்ணீர் அதிகமாக திறந்து விடப்படுவதாலும், மழையினால் காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் வந்து சேர்வதாலும், தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை செல்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து 4-வது நாளாகவும் வெள்ளம் செல்கிறது.

    அகஸ்தியர் அருவியில் 4-வது நாட்களாக யாரும் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. பாபநாசம் தலையணை பகுதியிலும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

    நெல்லை குறுக்குத்துறை முருகன்கோவில், தைப்பூச மண்டபம் ஆகியவைகள் தொடர்ந்து தண்ணீரில் மூழ்கியபடி உள்ளது. இதனால் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளார்கள். தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடி சுமார் 8 ஆயிரம் கன அடி நீர் கடலுக்கு செல்கிறது. ஆனாலும் பல்வேறு கால்வாய்களில் இருந்து விவசாயத்திற்கு செல்லும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை என்று விவசாயிகள் கூறி வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த ஒரு நாள் மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அடவிநயினார்-45, குண்டாறு-28, செங்கோட்டை-19, கடனாநதி-6, பாபநாசம்-4, சிவகிரி-3, ராதாபுரம்-3, சேர்வலாறு-2, தென்காசி-2, கருப்பாநதி-1.5, ராமநதி-1

    இந்த நிலையில் இன்று பகலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் அணைகளுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. #Thamirabaraniriver



    பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் கடனா அணைகளில் இருந்து வரும் உபரி நீர் தாமிரபரணியில் சேர்வதால் இன்று 3-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. #Thamirabaraniriver #Papanasamdam
    நெல்லை:

    தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த 2 மாதமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்கனவே பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணை ஆகிய 6 அணைகள் நிரம்பியுள்ளன.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணை நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 149 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து சுமார் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதே போல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 144.85 அடியாக உள்ளது.

    மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 79 அடியாக இருந்தது. இன்று 81.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,743 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. எனினும் மலைப்பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக வரும் காட்டாற்று வெள்ளம் அதிகமாக வருகிறது.

    வடக்கு பச்சையாறு அணை 14 அடியாகவும், நம்பியாறு அணை 20.6 அடியாகவும் இருந்துள்ளன. அணைகள் நிரம்பியதால் அங்கு வரும் தண்ணீர் அப்படியே ஆறுகளில் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்து வரும் மழையினால் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்து பாய்ந்தோடும் வெள்ளம்

    பாபநாசம், மணிமுத்தாறு மற்றும் கடனா அணைகளில் இருந்து வரும் உபரி நீர் தாமிரபரணியில் சேர்வதால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று 3-வது நாளாக தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக ஆற்றில் கரையோர மண்டபங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் தைப்பூச மண்டபம் ஆகியவற்றையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலப்பாளையம் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    நெல்லையில் தாமிரபரணியின் குறுக்கே பாலம் கட்டும் பணி வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கரையோரம் உள்ள வயல்வெளிகளை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.

    மணிமுத்தாறு அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும், கல்யாண தீர்த்தத்திலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். பாபநாசம் சோதனைச்சாவடி இன்றும் மூடப்ப‌ட்டு உள்ளது.

    அடவி நயினார் அணையில் வினாடிக்கு 1000 கன அடி நீர் வந்துகொண்டிருப்பதால் அந்த பகுதிகளிலுள்ள நீர் நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.மேலும் மேக்கரை நீர்தேக்கத்தின் நீர் அப்படியே வெளியேற்றபப்டுவதால் பண்பொழி, கடையநல்லூர் சாலையிலுள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், வாழை,காய்கறிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குண்டாறு அணை ஏற்கனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பே நிரம்பி வ‌ழிகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டாறு அணையில் 76 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் அடவிநயினார் அணை பகுதியில் 68 மில்லிமீட்டர் மழையும், செங்கோட்டையில் 66 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பாபநாசம் அணை பகுதியில் நேற்று 21 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா அணையில் 18 மில்லிமீட்டர், ராமநதி அணையில் 10 மில்லிமீட்டர், கருப்பாநதி அணையில் 8 மில்லிமீட்டர், சேர்வலாறு அணையில் 7 மில்லிமீட்டர், சங்கரன்கோவிலில் 3 மில்லிமீட்டர், அம்பையில் 2.4 மில்லிமீட்டர், ஆய்க்குடி, சிவகிரியில் தலா 1 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    மழை குறைந்தாலும் தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து உள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, பாவூர் சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, அம்பை, பணகுடி, களக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள குளங்களும் நிரம்பியுள்ளன. கால்வாய்களிலும் அதிகளவு தண்ணீர் செல்கிறது.

    எனினும் வடக்கு கோடைமேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி கால்வாய்களில் இன்னும் தண்ணீர் திறக்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் குளங்கள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்க பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஆற்று பாலங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #Thamirabaraniriver #Papanasamdam

    தாமிரபரணி ஆற்று பாலத்தின் மீது நின்று வாலிபர் ஒருவர் தண்ணீரில் குதிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நெல்லை:

    நெல்லை பகுதியில் உள்ள பெரும்பாலானவர்களின் செல்போன்களுக்கு இன்று ஒரு வீடியோ காட்சி வைரலாக பரவியது. அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞர் அரை டவுசர், பனியன் அணிந்து கொண்டு நெல்லை சந்திப்பு ஆற்றுப் பாலத்தில் நடந்து வந்து கைப்பிடி சுவர் அருகே நிற்கிறார். திடீரென்று அவர் கைப்பிடி சுவரில் ஏறி ஆற்றுக்குள் குதித்து தண்ணீரில் நீந்தி செல்கிறார்.

    இந்த வீடியோ காட்சி பெரும்பாலான செல்போன்களுக்கு வைரலாக பரவி வருகிறது. வீடியோ காட்சியில் அந்த இளைஞர்கள் பேசுவதும் பதிவாகி உள்ளது. இளைஞர் குதித்த ஆற்றுப் பகுதியின் அருகே தான் புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாலிபர் உயிர் பிழைத்து நீந்தி சென்றுவிட்டார். அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் பெரிய பிரச்சினையாகி இருக்கும்.

    இளைஞர்கள் இது போல் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளார்கள்.

    தற்போது நெல்லை சந்திப்பு போலீசார் இந்த வீடியோ காட்சி தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் யாரும் குதித்து விடாதபடி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    ×